தெலுங்குதேசம் எம்.பி.க்களை பா.ஜ.க.வில் சேர்த்தது குறித்து விமர்சித்துள்ள மாயாவதி, ‘‘பாலாபிஷேகம் செய்து சுத்தம் பண்ணிட்டீங்களேப்பா...’’ என்று கிண்டலடித்துள்ளார்.
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியில் இருந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேரை பா.ஜ.க. தன்பக்கம் இழுத்து கொண்டது. இதற்கு பா.ஜ.க.வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. கட்சித் தாவல் தடைச் சட்டத்தை பா.ஜ.க. கேலிக்குரியதாக்குவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசு தலைவர் உரையாற்றும் போது நேர்மையாக ஆட்சி நடைபெறும் என்று வாக்குறுதிகளை கொடுத்தார். அதே சமயத்தில், ஆளும் பா.ஜ.க.வோ, 4 தெலுங்குதேசம் எம்.பி.க்களை இழுக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இந்த எம்.பி.க்களைத்தான் முன்பு ‘ஆந்திர மல்லையாக்கள்’ என்று இதே பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
ஆனால், இப்போது அவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்ததும் சுத்தமாகி விட்டார்கள். தூத் கா துலா... (பாலாபிஷேகம் செய்து சுத்தம் பண்ணிட்டீங்களேப்பா...). பா.ஜ.க. அரசியலில் என்ன செய்தாலும் அது நேர்மையானது. அவர்கள் செய்யும் எதுவுமே தவறு இல்லையாம்.
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘பா.ஜ.க.வின் செயல் அரசியல்சட்டத்தையும், ஜனநாயகத்தையும் கொலை செய்வதாகும். இது போன்ற பாவச் செயல்களின் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை கேலிக்குரியதாக்கி விட்டது பா.ஜ.க!
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா எம்பி தேர்தலின் போது 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி விலைக்கு வாங்கியது இதே பா.ஜ.க.’’ என்று கூறியிருக்கிறார்.