வாக்கு எந்திரத்தைப் பற்றி முதலில் பேச வேண்டும் மாயாவதி காட்டம்

simultaneous elections was a new drama of the BJP to divert Mayawati

by எஸ். எம். கணபதி, Jun 20, 2019, 10:10 AM IST

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பிரதமரின் கோஷத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ‘வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி முதலில் பேச வேண்டும்’ என்று மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலையும், அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி கூறி வந்தார். ஆனால், இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், 2ம் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பிரதமர் மோடி முதல் வேலையாக ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தனது ஐடியாவை செயல்படுத்த முனைந்துள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி.யாவது வைத்துள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை கூட்டினார்.

வறட்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எவ்வளவோ பிரச்னைகள் இருக்க 2024ம் ஆண்டில் தேர்தல் நடத்துவதற்கு இப்போதே பிரதமர் முக்கியத்துவம் கொடுக்கிறாரே என்று சர்ச்சைகள் இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் பிரதமர் இந்த கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவதற்கு குறித்து பரிசீலிக்க ஒரு குழுவை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

அதே சமயம், பிரதமரின் கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க., டி.ஆர்.எஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணித்து விட்டன. பிரதமர் அழைப்பு விடுத்த 40 கட்சிகளில் 21 கட்சித் தலைவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உள்ளிட்டோர் பிரதமரின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த திட்டம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், ‘‘இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டம் இடம் தராது’’ என்றார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ‘‘வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த முறைகேடுகளை திசை திருப்புவதற்காக இந்த திட்டத்தை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார். முதலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி விவாதிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது’’ என்றார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, ‘‘ஒரே தேர்தல் திட்டம் குறித்து முதலில் ஒரு வெள்ளை அறிக்கை தயாரித்து வெளியிட வேண்டும்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், ‘‘இந்த திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்்கு முரணாக இருக்கும். மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ சட்டத்தில் இடமில்லை. இந்த திட்டம் மறைமுகமாக ஜனாதிபதி ஆட்சியை மாநிலங்களில் கொண்டு வருவதாக அமையும். மேலும் இந்த திட்டம் கூட்டாட்சித் தத்துவதற்கு எதிரானது’’ என்றார்.

இதே போல், பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த பிரதமரின் ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புகள் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான பாசிச ஆட்சி; சந்திரசேகரராவ் மீண்டும் பேச்சு

You'r reading வாக்கு எந்திரத்தைப் பற்றி முதலில் பேச வேண்டும் மாயாவதி காட்டம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை