ஒரு சிறுவனுக்காக திறக்கப்பட்ட பள்ளி

closed school reopens for a single student in valparai

by எஸ். எம். கணபதி, Jun 20, 2019, 10:39 AM IST

வால்பாறையில் ஒரேயொரு சிறுவனுக்காக மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் சின்னக்கல்லார் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிறைய பேர் வசித்து வந்தனர். இப்பகுதியில் யானைகள் அடிக்கடி வந்து அட்டகாசம் செய்து வந்தன. ஓட்டு வீடுகளை முட்டித் தள்ளுவதும் சாமான்களை துவம்சம் செய்வதுமாக யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் பலர் வீடுகளை காலி செய்து விட்டனர்.

இந்நிலையில், இந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ஒரு ஆரம்பப் பள்ளி, சின்னக் கல்லாரில் செயல்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2017-18ம் ஆண்டில் ஒரெயொரு மாணவி மட்டும் இந்த பள்ளியில் படித்து வந்தாள். அதன்பிறகு அவளும் வேறு பள்ளிக்கு மாறவே, பள்ளியை மூடி விட்டு அங்கு பணியாற்றிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை வேறு பள்ளிக்கு கல்வித்துறை மாற்றம் செய்தது.

தற்போது, சின்னக்கல்லாரில் யானைகளின் அட்டகாசம் வெகுவாக குறைந்து விட்டது. எனினும் இப்பகுதியில் குறைந்த தொழிலாளர்களே வசிக்கிறார்கள். இந்நிலையில், ராஜேஸ்வரி என்ற பெண், தனது 6 வயது பையனை பள்ளியில் சேர்க்க முடியவில்லை என்று கூறி, சின்னக்கல்லாரில் மீண்டும் பள்ளியைத் திறக்கக் கோரிக்கை விடுத்தாார்.

இதை ஏற்று, ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் அங்கு மூடப்பட்ட ஆரம்பப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது ராஜேஸ்வரியின் மகன் சிவா மட்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்த பள்ளிக்கு பெரிய கல்லாரில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘இந்த ஆரம்பப் பள்ளி 1943ம் ஆண்டில் திறக்கப்பட்டது. அப்போது இங்கு 300 தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வந்தன. 70 ஆண்டுகளாக செயல்பட்ட பள்ளி கடந்த ஆண்டு மூடப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு மாணவனுக்காக திறக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பணி நியமனம் செய்ய கோரி சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்

You'r reading ஒரு சிறுவனுக்காக திறக்கப்பட்ட பள்ளி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை