மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் மகள் போட்டோவைப் பார்த்து அவரது சக மாணவன் கிண்டலடித்துள்ளான். இதையடுத்து, இன்ஸ்டகிராமில் அந்த படத்தை நீக்கிய அமைச்சர், மீண்டும் அதை பதிவிட்டு அந்த மாணவனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை மற்றும் ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானி தனது மகள் ஜோய்ஸ் இரானி எடுத்த செல்பி போட்டோவை, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த ஜோய்ஸின் சக மாணவன், அந்த போட்டோவை குறிப்பிட்டு கிண்டலடித்து வம்பு செய்திருக்கிறான்.
இதையடுத்து, அந்த போட்டோவை நீக்குமாறு ஸ்மிரிதி இரானியிடம் ஜோய்ஸ் கேட்கவே, அவரும் அதை நீக்கி விட்டார். அதன்பின்பு, இன்ஸ்டகிராமில் அந்த படத்்தைப் பதிவிட்ட ஸ்மிரிதி இரானி, ‘‘எனது மகள் விளையாட்டு வீராங்கனை. லிம்கா புக்ஸ் சாதனை படைத்திருக்கிறாள். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறாள். சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கிறாள். அவள் எதையும் எதிர்த்து போராடுவாள். ஜோய்ஸின் அம்மா என்பதில் நான் பெருமை கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஸ்மிரிதி இரானி கூறுகையில், ‘‘ஒரு இடியட் எனது மகளை கிண்டல் செய்ததால், அந்த படத்தை நீக்குமாறு கூறினாள். நானும் நீக்கினேன். அதன்பிறகு அப்படி செய்வது அந்த மாணவனின் தவறை ஆதரித்தது போலாகி விடும் என்பதை உணர்ந்தேன். எனவே, மீண்டும் போட்டோவை போட்டு, கடுமையாக கண்டனம் பதிவிட்டேன். எனது மகள் எதையும் சந்தித்து போராடுவாள்’’ என்றார்.