எங்க ஊர்ல இருந்து சென்னைக்கு தண்ணி தரக் கூடாது - துரைமுருகனின் எதிர்ப்பால் திமுகவுக்கு சங்கடம்

Dmk senior leader Durai Murugan opposes supply drinking water to Chennai from jolarpet by train:

by Nagaraj, Jun 22, 2019, 14:11 PM IST

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்குள்ளேயே எதிர்ப்பு காட்டினால் அண்டை மாநிலத்துக்காரன் நமக்கு எப்படி தண்ணீர் தருவான் என துரைமுருகனின் கருத்துக்குக்கு கண்டன குரல்கள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தலைநகர் சென்னையிலோ மக்கள் குடிக்க, குளிக்க என எதற்குமே தண்ணீர் இல்லாமல் படும் பாடு கொஞ்ச நஞ்சமில்லை. இதனால் குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காண, கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அத்துடன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை சென்னைக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படும் எனவும், அதற்காக ரூ 65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் வேலூர் மாவட்டத்தில் தட்டுப்பாடு அதிகரித்து விடும். எனவே சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்தப் பிரச்னையை எழுப்பப் போவதாகவும் துரைமுருகன் கூறியுள்ளார்.

துரைமுருகனின் இந்தக் கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சொந்த மாநிலத்திற்குள்ளேயே தண்ணீர் கொடுக்க எதிர்ப்பு காட்டுவது ஏன்? இப்படி சுயலாப அரசியல் செய்தால் மற்ற மாநிலங்களிடம் இருந்து தண்ணீர் பெறுவது அவ்வளவு எளிதாகிவிடுமா? என்றெல்லாம் துரைமுருகனின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்து, திமுகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் துரைமுருகன் கூறியதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துரைமுருகன் கூறியுள்ளதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பதிலளித்துள்ளார். ஜோலார்ப்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதால், வேலூருக்கு விநியோகம் செய்யப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படாது. ஜோலார்ப்பேட்டை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மழை பெய்து பிரச்னை முடிவுக்கு வரும் என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

மழை வேண்டி அதிமுக சார்பில் யாக பூஜை.... அமைச்சர்கள் பயபக்தியுடன் பங்கேற்பு

More Politics News


அண்மைய செய்திகள்