திருச்சியில் இன்று காலை நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ‘‘காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க வேண்டாம், உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும்’’ என்று கூறினார். திருச்சியில் மட்டுமாவது திமுக தனித்து போட்டியிட தாம் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவேன் என்றும் அவர் பேசினார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கே.என்.நேரு அவசர, அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது கலகக் குரலும் அல்ல, கழகத்தின்(திமுகவின்) குரலும் அல்ல. ஒரு மாவட்டச் செயலாளராக எனது கருத்தை கூறினேன். தி.மு.க.வின் ஒரு தொண்டன் என்ற அடிப்படையில் கூறினேன் .
நான் எனது கருத்தை வெளிப்படையாக பேசியதில் தவறு எதுவும் இல்லை. கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்த போதே காங்கிரசார், கலைஞரை விமர்சித்துள்ளனர். நாங்கள் அதை பொறுத்துக் கொண்டுதான் இப்போதும் கூட கூட்டணியி்ல் இருக்கிறோம்.
திமுக அதிக இடங்களில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் பற்றி கருத்து கூறினேன். ஆனாலும், கூட்டணி குறித்து திமுக தலைவர் தான் முடிவு எடுப்பார். திமுக தலைவருக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட ஒரு மாவட்ட செயலாளர் நான்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேரு இப்படி விளக்கம் கொடுத்தாலும், காங்கிரசுடன் உறவை முறிக்க தி.மு.க. முதல் பந்தை வீசியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.