ஒரே தேசம், ஒரே கட்சி பா.ஜ.க.வின் முயற்சி?

Is bjp pulling big shots in other parties to make one nation, one party?

by எஸ். எம். கணபதி, Jun 28, 2019, 10:23 AM IST

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற நடைமுறையை கொண்டு வர நினைக்கும் பா.ஜ.க, அது நடக்கிறதோ, இல்லையோ, ஒரே தேசம், ஒரே கட்சி என்று கொண்டு வர எத்தனிக்கிறது போல் தெரிகிறது. காங்கிரஸ், திரிணாமுல், தெலுங்குதேசம் என வரிசையாக ஒவ்வொரு கட்சியில் இருந்தும் முக்கியப் பிரமுகர்களை தொடர்ந்து இழுத்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சிலரை பா.ஜ.க.வினர் தங்கள் கட்சிக்கு இழுத்தனர். அதே போல், கேரளாவில் சோனியாவுக்கு நெருக்கமான விசுவாசியாக இருந்த டாம் வடக்கன் உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸில் உள்ள அதிருப்தியாளர்களை பா.ஜ.க.வுக்கு இழுத்தனர்.
தேர்தலில் 302 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் மோடி ஆட்சி அமைந்து விட்டது.

இந்நிலையில், சுக்குநூறாக சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை இனிமேல் பா.ஜ.க. கண்டுகொள்ளாமல் விட்டு விடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியை குறிவைத்து பா.ஜ.க. தாக்கத் தொடங்கியது. திரிணாமுல் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என்று பலரை தன்பக்கம் இழுத்தது. இது வரை திரிணாமுல் கட்சியில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நூறு கவுன்சிலர்கள் வரை பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர்.

இதற்கிடையே, கேரளாவில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல்லா குட்டி திடீரென மோடியை புகழ்ந்தார். அவரும் கட்சி தாவ தயாராகி விட்டதை அறிந்த காங்கிரஸ் தலைமை, அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இதையடுத்து, அவர் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி விட்டார்.

அதே நேரத்தில், ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியை கரைக்கும் பணியையும் பா.ஜ.க. தொடங்கியது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ள சமயத்தில், அவரது கட்சியில் இருந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களில், ரமேஷ், சவுத்ரி, மோகன்ராவ், வெங்கடேஷ் என்று 4 பேரை பா,ஜ.க. இழுத்து கொண்டது. இதை கேள்விப்பட்ட நாயுடு, ‘‘இது போன்ற பிரச்னைகளை கடந்த காலங்களிலும் தெலுங்குதேசம் சந்தித்திருக்கிறது. இதனால் எல்லாம் கட்சியை காலி செய்து விட முடியாது. அதனால், கட்சிக்காரர்கள் யாரும் பதற்றமடையத் தேவையில்லை’’ என்று அங்கிருந்தே அறிக்கை விட்டார்.

ஆனாலும் கொஞ்சமும் அசராத பா.ஜ.க.வினர் நேற்று(ஜூன்27) தெலுங்குதேசத்தின் முன்னாள் அமைச்சரும், பொதுச் செயலாளருமான பெட்டி ரெட்டி, முன்னாள் எம்.பி. சுரேஷ் ரெட்டி, போட ஜனார்த்தனம் ஆகிய முக்கியப் பிரமுகர்களை தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளனர். இவர்கள் டெல்லிக்கு சென்று பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர்.

ஏற்கனவே தெலுங்குதேசம் கட்சியின் 4 ராஜ்யசபா உறுப்பினர்களுடன், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் லஙகா தினகர், வர்த்தக அணி தலைவர் கோனேறு வெங்கட்ட கிருஷ்ணா ஆகியோர் பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கின்றனர். இப்படி அடுத்தடுத்து தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு ஆட்களை இழுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களாக விளங்கிய சசிதர் ரெட்டி, சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஷேக் ரகமத்துல்லா ஆகியோரும் கட்சியில் இருந்து விலகி, நேற்று முரளிதர்ராவ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் மற்ற கட்சிளில் இருக்கும் முக்கியப் பிரமுகர்களை இழுந்து அம்மாநிலங்களில் 2வது பெரிய கட்சியாக வருவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இந்த வேலையை வெற்றிகரமாக முடித்ததும், அடுத்து தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் அந்த வேலையை துவங்கவுள்ளதாம். தமிழ்நாட்டில் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு இழுப்பதற்கும், அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்களை வளைப்பதற்கும் திட்டங்கள் தயாராகி வருவதாக டெல்லி பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You'r reading ஒரே தேசம், ஒரே கட்சி பா.ஜ.க.வின் முயற்சி? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை