மனுஷனுக்கு கெட்ட நேரம் வந்தால் அடுத்தடுத்து அடி விழும் என்பார்கள். இது இப்ப சந்திரபாபு நாயுடுவுக்குத்தான் மிக சரியாக பொருந்துகிறது.
கடந்த 1999ல் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த போது, சந்திரபாபு நாயுடுதான் அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர். அவரது தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த பாலயோகி, மக்களவை சபாநாயகரானார். அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தார்.
இதற்கு பிறகு, 2014ம் ஆண்டில் பிரிக்கப்பட்ட ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். மேலும், மத்தியில் மோடி அரசிலும் அவரது கட்சி பங்கேற்றது. 2018ம் ஆண்டில் அவருக்கும், மோடிக்கும் பிடிக்காமல் போய் விட்டது. மோடி அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. அதன்பிறகு, மோடியை கடுமையாக விமர்சித்தார் சந்திரபாபு நாயுடு.
இப்போது ஆந்திராவில் வெறும் 22 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே தெலுங்குதேசம் வென்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலிலும் 2 தொகுதிகளில்தான் வெற்றி கிடைத்துள்ளது. இதனால், அரசியலில் திடீரென செல்வாக்கை இழந்து விட்டார் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில், அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அச்சமயம், அவரது கட்சியில் இருந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களில் 4 பேரையும், அடுத்து சில முக்கிய தலைவர்களையும் பா.ஜ.க. தன்பக்கம் இழுத்து கொண்டது. இன்னமும் தெலுங்குதேசம் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களிடம் பா.ஜ.க.வினர் பேசி வருகிறார்கள்.
இன்னொரு புறம், ஜெகன் மோகன் அரசும் சந்திரபாபுவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. அமராவதியில் முதலமைச்சருக்காக கட்டிய பங்களா, அதையொட்டி கட்டப்பட்்ட அலுவலகம் ஆகியவற்றை தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தானே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு ஜெகன் அரசுக்கு சந்திரபாபு கடிதம் எழுதினார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அமைச்சர் அந்தஸ்திலானது. எனவே, அரசு நினைத்தால் அவரது கோரிக்கையை ஏற்கலாம்.
ஆனால், அதை ஜெகன் அரசு நிராகரித்ததுடன் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட சந்திரபாபுவின் அலுவலகக் கட்டடத்தை இடித்து தள்ளியது. இது விதிமீறிய கட்டப்பட்ட கட்டடம் என்று காரணம் கூறியது. அது மட்டுமல்ல. சந்திரபாபு பயன்படுத்தும் பங்களாவும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதால், அதையும் இடிக்கப் போவதாக கூறி காலி செய்ய அவருக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடுத்த கட்டமாக, அமைச்சர்கள் புக்கன்னா ராஜேந்திர ரெட்டி, பெட்டி ராமச்சந்திர ரெட்டி, குரசலா கன்னா பாபு, கவுதம் ரெட்டி ஆகியோரைக் கொண்ட கேபினட் சப்கமிட்டியை ஜெகன் நியமித்துள்ளார். இந்தக் குழு, சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்கள், தலைமைச் செயலகம் கட்டுவது உள்ளிட்ட பெரிய ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்யப் போகிறது. அந்த ஆய்வில் எந்தெந்த துறைகளில் ஊழல் நடந்துள்ளது என்று கண்டுபிடித்து, ஒன்றைக் கூட விட்டுவிடாமல் விசாரணை நடத்தவுள்ளது.
தமிழகத்தில் 1991-96ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்தன. 1996ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஜெ. ஆட்சிக்காலத்து ஊழல்களை விசாரிப்பதற்கென்று மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.சுப்பிரமணியை விஜிலென்ஸ் கமிஷனராகவும், ஜூனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரை இணைக் கமிஷனராகவும் நியமித்தார் கருணாநிதி.
அப்போது, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடந்த ஊழல்கள் குறித்த தகவல்கள், அமைச்சர்கள் மூலமாக சேகரிக்கப்பட்டு, விஜிலென்ஸ் கமிஷனருக்கு அனுப்பப்பட்டன. விஜிலென்ஸ் கமிஷனர் அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீஸ் மற்றும் சி.பி.சிஐ.டி விசாரணைக்கு அனுப்பினார். அச்சமயம், ஜெயலலிதா மீது மட்டும் டான்சி நிலபேர ஊழல், கலர் டிவி ஊழல், சொத்துக்குவிப்பு ஊழல் என்று ஒரே சமயத்தில் 8 வழக்குகள் தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், ஒவ்வொரு வழக்குகளையும் அவர் நீண்ட காலமாக சந்தித்து வந்தார். அவரது ஆட்சியில் இருந்த அமைச்சர்களும் வழக்குகளை சந்தித்தனர். அதில் மருங்காபுரி பொன்னுசாமி, சிறைத் தண்டனை பெற்று அதை முழுமையாக அனுபவித்தார்.
தற்போது, ஜெகன் அரசும் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது அமைச்சர்களின் ஊழல்களை விசாரிப்பதற்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மன்மோகன்சிங்கை நியமித்துள்ளது. எனவே, சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நரலோகேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வெகுவிரைவில் ஊழல் வழக்குகள் பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.