பாஜகவை தோற்கடித்ததால் தமிழகத்துக்கு இழப்பு என தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு, அப்படியென்றால் தமிழகத்துக்கு மத்திய அரசு எதுவும் செய்யாது என கூற வருகிறீர்களா தமிழிசை? என்று கரூர் காங்கிரஸ் எம்.பி.கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த முறை ஒரே எம்.பி.யாக பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் வெற்றி பெற்று மத்திய மந்திரியாகவும் ஆனார். ஆனால் இம்முறை பாஜக அங்கம் வகித்த அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதிமுகவுக்கு மட்டும் ஒரே ஒரு தொகுதி கிடைக்க, பாஜகவோ அம்போவாகி விட்டது.இந்த படுதோல்வியால் விரக்தியில் உள்ள பாஜக தலைவர்கள் தினமும் ஏதாவது ஏடாகூடமான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் தங்கள் சொத்துக்களை விற்றாவது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கடனை அடைக்க வேண்டும் என சமீபத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு, தமிழக எம்.பி.க்களை கோபம் கொள்ளச் செய்துள்ளது.
திமுக கூட்டணியில் இம்முறை 37 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.மக்களவை கூட்டத்தொடரில் தமிழக பிரச்னைகள் குறித்து குரல் கொடுக்கும் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுக்களையும் கொடுத்து வருகின்றனர். இப்படி தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை மனு கொடுப்பதைத் தான் தமிழிசை கிண்டலாகவும், அதே நேரத்தில் ஒரு விதத்தில் வஞ்சம் தீர்ப்பது போலவும் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், கார்த்தி சிதம்பரம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கிறார்.. கலாநிதி வீராச்சாமி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை விடுக்கிறார்... டி.ஆர்.பாலு, ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை வைக்கிறார்... தயாநிதி மாறன் தென்னக ரயில்வே ஆபீசில் மனு கொடுக்கிறார்.. அமேதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி ராணி யோ மத்திய அமைச்சரான ஒரு மாதத்தில் அத்தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றி அசத்தல்! பாஜகவை தோற்கடித்த தமிழகம்? இழப்பு ??? என்று 3 கேள்விக்குறிகளைப் போட்டு தமிழிசை பதிவிட்டிருந்தார்.
தழிசையின் இந்தப் பதிவால் கொந்தளித்துள்ள கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியோ, என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழிசை? என்று கோபமாக கேள்வி எழுப்பி டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜோதிமணி தனது பதிவில், என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழிசை? தமிழக மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உரிமைகளும், திட்டங்களும் கிடைக்காது என்கிறீர்களா? அரசும் மக்கள் பிரதிநிதிகளும் அனைவருக்கும் பொதுவானவர்கள். நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம். நீங்கள் துணை நில்லுங்கள். கட்சிகளை விட மக்களும், தேசமும் முக்கியம் என்று ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழிசையின் பதிவுக்கு ஜோதிமணியுடன் சேர்ந்து பலரும் டுவிட்டரில் பாஜகவையும், அக்கட்சியினரின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தமிழிசைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.