சிஷ்யர் கராத்தேவை கைவிட்ட ப.சிதம்பரம் ... மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

Karate thiagarajans comments are not acceptable, Cong senior leader p.chidambaram tweets

by Nagaraj, Jun 29, 2019, 22:47 PM IST

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கராத்தே தியாகராஜன் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்டுப் பெற வேண்டும் அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் பேசியது சர்ச்சையானது. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட, கராத்தே தியாகராஜன் கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், இன்று ப.சிதம்பரத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கராத்தே தியாகராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்தார். தன்னை உள்நோக்கத்தோடு கட்சியிலருந்து நீக்கியுள்ளதாகவும், இதற்கும் கே.எஸ்.அழகிரி தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன், இன்று ப.சிதம்பரத்தை சந்தித்ததும், அதன் பின்னர் பேட்டியளித்ததும் தமிழக காங்கிரசில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால் வேறு வழியின்றி, கராத்தே தியாகராஜன் விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், கராத்தே தியாகராஜன் அண்மையில் பேசியதும், இன்று அளித்த பேட்டி ஆகியவற்றில் எனக்கு அறவே உடன்பாடில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அவை பாதகமானவை, அவை ஏற்புடையதல்ல. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியைச் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தியாகராஜனை அறிவுறுத்தி உள்ளேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

You'r reading சிஷ்யர் கராத்தேவை கைவிட்ட ப.சிதம்பரம் ... மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை