உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி பெற பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருக்க, இரு நாட்டு ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியே ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்தத் தொடரில் இதுவரை ஆப்கானிஸ்தான் ஆடிய 7ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 7 புள்ளிகளுடன் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ள பாகிஸ்தானோ இன்றைய போட்டியிலும், அடுத்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிட்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
இதனால் இன்று லீட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான்-ஆப்கன் இடையே நடைபெறும் போட்டியை முக்கியத்துவமான ஒன்றாக இரு அணிகளுக்கும் அமைந்து விட்டது. இந்தப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றி கிடைக்க வேண்டும் என தங்கள் நாட்டு அணி வீரர்களை உற்சாகப்படுத்த ஆப்கன் ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்துக்கு படையெடுத்தனர். அதே போல் பாகிஸ்தான் ரசிகர்களும் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் மைதானத்துக்கு வெளியே இருநாட்டு ரசிகர்களும் திடீரென மோதலில் ஈடுபட்டனர். அப்போது இரும்புத் தடுப்புகளை எடுத்து வீசியெறிந்ததால் பெரும் பதற்றம் நிலவியது. பின்னர் அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். இதேபோல் மைதானத்துக்கு உள்ளேயும் இரு நாட்டு ரசிகர்களும் அடிக்கடி கலாட்டா செய்ய சிலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவமும் இன்றைய போட்டியில் அரங்கேறியது.