பொது வெளியிலோ, செய்தி, ஊடகங்களிடமோ பேசக் கூடாது என அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.வரும் 1-ந் தேதி முதல் தாராளமாக பேசலாம், ஊடக விவாதங்களில் பங்கேற்கலாம் என ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும், இரட்டைத் தலைமை உள்ளதால் யாருக்கு அதிகாரம் என்பது தெரியவில்லை என மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏவும் மாவட்டச் செயலாளருமான ராசன்செல்லப்பா திடீரென போர்க்கொடி உயர்த்தினார். அவருடைய இந்தக் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என அதிமுக அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஆளாளுக்கு கருத்துக்களை வெளியிட்டதால் அதிமுகவில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் உடனடியாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டினர். பெயரளவுக்கு இந்தக் கூட்டத்தில் ஒரு சிலர் மட்டும் பேசினர்.கூட்டம் முடிந்தவுடன் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அதிமுகவினர் யாரும் பொதுவெளியில் கட்சியின் நிலைப்பாடு குறித்து பேசக்கூடாது.செய்தித் தொடர்பாளர்களோ, மற்ற நிர்வாகிகளோ ஊடக விவாதங்களில் பங்கேற்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. மேலும் அதிமுகவினரையோ, அதிமுக ஆதரவு பிரமுகர்கள் என்ற வகையிலோ யாரையும் விவாதங்களில் பங்கேற்க அழைக்கக் கூடாது என ஊடகங்களுக்கும் அதிமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். வரும் ஜூலை 1-ந்தேதி முதல் அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஊடக விவாதங்களில் பங்கேற்கலாம் என்றும் அறிவித்துள்ளனர்.