டி.வி. விவாதங்களில் பாஜகவினர் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிப் பிரதிநிதிகளை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க தடை விதிப்பது இப்போது பேஷனாகி விட்டது. தங்கள் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி விவகாரம், முக்கியப் பிரச்னைகளில் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பதில் உறுதியற்ற தன்மை போன்றவற்றால்,டி.வி. விவாதங்களில் பங்கேற்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆளாளுக்கு ஏதாவது கருத்துக்களை கூறி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக கட்சியினர் யாரும் டி.வி.விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்றே தடை விதிக்க ஆரம்பித்து விட்டனர்.
முதலில் அதிமுகதான் இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டது. கடந்த மாதம் கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என மதுரை அதிமுக எம்.எல்.ஏ, ராஜன் செல்லப்பா போர்க்கொடி உயர்த்த அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அதிமுக அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரும் கருத்துக்களை வெளியிட சர்ச்சை பெரிதானது.
இதனால் அவசரமாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டிய அதிமுக மேலிடம், கட்சியினர் பொது வெளியில் கருத்துக் கூறுவதை தவிர்க்க வேண்டும். டிவி விவாதங்களிலும் யாரும் பங்கேற்கக் கூடாது எனவும் தடை போட்டது. பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் பங்கேற்கலாம் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை விட்டனர்.
இதே போன்று அமமுகவினரும் பங்கேற்கக் கூடாது என தினகரன் தடை போட்டார். இந்நிலையில் பாஜக சார்பில் இனிமேல் யாரும் டி.வி. விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என தமிழிசை சவுந்தர்ராஜன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதில் மிகவும் பயனளிப்பதாக உள்ளது.
ஆனால் சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்போது பாஜக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழிசை தெரிவித்துள்ளார்.