ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்குமா சுப்ரீம் கோர்ட்?

Dmk petition seeking Disqulification of 11 mlas including ops will be taken on july 3

by எஸ். எம். கணபதி, Jul 2, 2019, 22:11 PM IST

ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதால், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி ஆட்சி எந்நேரமும் கவிழ்ந்து விடுமோ என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்குப் பின், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகினார். அப்போது தன்னை சசிகலா குடும்பம் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாக குற்றம்சாட்டி தர்மயுத்தம் நடத்தினார். ஆனாலும், சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி விட்டார். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் கைகோர்த்து, சசிகலா குடும்பத்தை ஒதுக்கித் தள்ளினர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அம்மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன்(இப்போது திமுகவில் உள்ளார்) உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சுப்ரீம் கோர்ட், கடந்த அக்டோபர் 30ம் தேதியன்று இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தது.

ஆனால், மேலும் சில நாட்களுக்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதற்கு தி.மு.க. தரப்பிலும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அக்டோபர் 30ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தயார் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனால் விசாரணை தள்ளிப் போனது.

இந்நிலையில், தங்கத்தமிழ்ச் செல்வன் சார்பில் சீனியர் வழக்கறிஞர் கபில்சிபல் இன்று(ஜூலை2) காலை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரின் தகுதிநீக்க வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஏற்றுக் கொண்டார். விரைவில் புதிய அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வரும் என்று அவர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி,ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக ஜூலை 3ம் தேதியே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்க வேண்டுமென்று கவர்னரிடம் மனு கொடுத்ததற்காக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, அது நீதிமன்றத்திலும் உறுதியானது. அதே சமயம், ஓ.பி.எஸ் உள்பட 11 பேர் எடப்பாடி அரசை எதிர்த்து வாக்களித்தும் அவர்களின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படவில்லை.

அது மட்டுமல்ல, ஓ.பி.எஸ் துணை முதல்வராகவும், மாபா பாண்டியராஜன் அமைச்சராகவும் இருக்கின்றனர். இதற்கெல்லாம் பின்னணியில் பா.ஜ.க. ஆதரவுதான் காரணமோ என்ற வெறுப்பில்தான் மக்கள், நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்து வாக்களித்தனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு பா.ஜ.க. தலைமை இதை நன்கு உணர்ந்துள்ளது.

எனவே, இனிமேலும் எடப்பாடி ஆட்சியை தாங்கிப் பிடித்தால், தங்களுக்கு எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லாமல் போய் விடுமோ என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளது. இதெல்லாம் புரிந்துதான், திமுக தலைவர் ஸ்டாலினும் காய் நகர்த்தி வருகிறார். அவர் சொன்னது போது பதுங்கிய புலி இப்போது பாய எத்தனிப்பதை காண முடிகிறது.

You'r reading ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்குமா சுப்ரீம் கோர்ட்? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை