தேசதுரோக வழக்கின் தீர்ப்பில் வைகோ குறைந்தபட்சத் தண்டனை கேட்டதாக நீதிபதி எழுதியிருப்பதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று அந்த நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது. இதன்படி, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக, எனக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
நான் ஏற்கனவே ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என்ற பேசினேன். நான் பேசியதை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரிலேயே சொன்னேன். நான் பேசியது தேச துரோகம் அல்ல. நாட்டின் ஒருமைப்பாடு கெட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் பேசினேன்.
விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். ஒரு இனம் அழிந்து விடக் கூடாது. ஈழத் தமிழ் இனம் அழிந்து விடக் கூடாது என்று போராடிய விடுதலைப் புலிகளை ஆதரித்து நான் பேசினேன். நேற்றும் பேசினேன். இன்றும், நாளையும் பேசுவேன். அப்படி பேசியதற்காக என்னை சிறையில் அடைத்த போது, உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட்மனு தாக்கல் செய்தேன்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது சரியா என்று உச்சநீதிமன்றம் கேட்டது. ஒரு இனத்துக்காக ஆதரித்து பேசுவது தவறல்ல என்றேன். அந்த வழக்கில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது குற்றமல்ல என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இப்போது எனக்கு அதே காரணத்திற்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதி வழங்கிய தீர்ப்பை வாங்கி பார்த்தோம். நான் தவறை ஏற்றுக் கொண்டு குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக இருந்தது. அதை வழக்கறிஞர்கள் நன்மாறனும், தேவதாசும் என்னிடம் காட்டினார்கள்.
எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனைதான் கேட்டேன். நான் விடுதலைப் புலிகள் ஆதரித்துதான் இனிமேலும் பேசுவேன். அதற்காக எனக்கு அதிகபட்சத் தண்டனை கொடுங்கள் என்றுதான் நான் கேட்டேன். ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.
ஆனால், நீதிபதி ஏதோ நான் குறைந்தபட்சத் தண்டனை கேட்டதாக தீர்ப்பில் எழுதியிருப்பது, நீதிபதி உள்ளத்தில் விஷம் இருப்பதைக் காட்டுகிறது. இதை நான் நீதிபதியிடமே சொன்னேன். இளைஞர்களின் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நான் விதை விதைப்பதாக நீதிபதி தீர்ப்பில் கூறியிருக்கிறார். ஆம். நான் அதைத்தான் செய்தேன். இனிமேலும் செய்வேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.