ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது, வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்சம் மூன்றரை லட்சம் வரை வரிவிலக்கு சலுகை பெறலாம் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பொறுப்பேற்றுள்ளார். அவர் தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
தற்போது ரூ.250 கோடி வரை சுற்றுமுதல்(டர்ன் ஓவர்) உள்ள கம்பெனிகளுக்கு குறைந்தபட்ச வரியாக 25 சதவீதம் அளிக்கப்படுகிறது. இதை ரூ.400 கோடி வரை சுற்றுமுதல் உள்ள கம்பெனிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம், 99.3 சதவீத கம்பெனிகள் இந்த பலனை பெறலாம்.
வருமான வரிச் சலுகையில், தாங்களே குடியிருப்பதற்காக சொந்த வீடு வாங்கியிருப்பவர்கள், அதற்கான கடன் வட்டியில் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம் என்று தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த வீட்டுக்கடன் வட்டியில் மேலும் ஒன்றரை லட்சம் சலுகை தரப்படுகிறது. எனவே வரி விலக்கிற்கு மூன்றரை லட்சம் வரை வீட்டு கடன் வட்டியில் எடுத்து கொள்ளலாம்.
பான் (வருமானவரி நிரந்தர கணக்கு) மற்றும் ஆதார் ஆகியவற்றை மாற்றி பயன்படுத்தி கொள்ள வசதி செய்யப்படும். அதாவது, வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய ஆதார் எண்ணை பயன்படுத்தினால், பான் எண் தேவையில்லை.
கம்பெனிகளில் ரொக்கப் பணபரிமாற்றத்தை குறைக்க ஓராண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை ரொக்கமாக எடுத்தால், 2 சதவீத வரி, வங்கிக் கணக்கில் இருந்தே பிடித்தம் செய்யப்படும்.
தேசத்தின் வளர்ச்சிக்கு பணக்காரர்கள்தான் அதிகமாக உதவ வேண்டும். எனவே, ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் 5 கோடி வரை வருமானம் கொண்டவர்களுக்கும், ரூ.5 கோடிக்கு அதிகமான வருமானம் கொண்டவர்களுக்கு உபவரியாக 3 முதல் 7 சதவீதம் விதிக்கப்படும்.
அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.