மத்திய பட்ஜெட் எப்படி..? எந்தப் பக்கம் கருத்து சொல்வது..?- சர்ச்சையான சு.சாமியின் டிவிட்

Union budget:It depends to whom I owe a greater duty, Subramanian Swamis reaction on twitter

by Nagaraj, Jul 5, 2019, 16:02 PM IST

நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் தடவையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து, உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப்பிரமணிய சாமி டிவிட்டரில், இந்த பட்ஜெட்டை ஒரு பொருளாதார பேராசிரியர் நிலையில் பார்ப்பதா? இல்லை கட்சியின் எம்.பி. ரீதியில் கருத்துக் கூறுவதா? எந்த நிலைப்பாட்டை எடுப்பது? என்று ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய அரசியலில் பன்னெடுங்காலமாக தனக்கு மனதில்பட்ட கருத்தை பளிச்சென கூறி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது சுப்பிரமணியசாமிக்கு வழக்கமான ஒன்று. உண்மையிலேயே உலகம் பொருளாதாரத்தை கரைத்துக் குடித்தவர் தான். இப்போதும் ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் என உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில், கவுரவ பேராசிரியராக பாடம் நடத்தச் செல்கிறார்.

தற்போது பாஜகவில் ராஜ்யசபா நியமன எம்பியாக இருக்கும் சு.சாமி, மத்திய அமைச்சராகி விட வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் கடந்த 2014-ல் மோடி பிரதமரானது முதலே இருந்து வருகிறார். நரேந்திர மோடி, ஆனால் பிரதமர் மோடியேற, சுப்பிரமணிய சாமிக்கு எந்த பதவியும் தராவிட்டாலும் அவரை தனது நெருங்கிய நண்பராக வைத்து கொண்டார். எப்போது வேண்டுமானாலும் தன்னை சந்திக்கும் வகையில் சாமியை நடத்தி வந்தார். தற்போது 2-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற போதும், தமக்கு நிதி அமைச்சர் அல்லது சட்ட அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்தும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. மேலும் சாமியின் கருத்துக்களையும் பிரதமர் மோடியும், பிற பாஜக தலைவர்களும் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் மத்திய அமைச்சர் பதவியும் தராமல், தனது கருத்துக்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடி மீது சுப்பிரமணிய சாமி சமீப காலமாக கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்றே கூறலாம். தனது அதிருப்தியை டிவிட்டரில் பகிரங்கமாகவே கடந்த சில நாட்களாக பதிவிட்டும் வருகிறார் சு.சாமி.

கடந்த ஜூன் 20ம் தேதி ட்விட்டரில் ‘‘சீனாவின் பிரபலமான சிங்குவா பல்கலைக்கழகம், வரும் செப்டம்பரில் என்னை அறிவார்ந்தோர் சபையில், ‘‘சீனாவின் பொருளாதாரம்- கடந்த 70 ஆண்டுகளின் ஆய்வு’’ என்ற தலைப்பில் உரையாற்ற வருமாறு அழைத்துள்ளது. நமோ(நரேந்திர மோடி) என் கருத்துக்களை தெரிந்து கொள்ளவே ஆர்வமில்லாமல் இருப்பதால், நான் சீனாவுக்கு செல்வதுதான் சிறந்தது போலும்...’’ என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து, ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். பொருளாதார நிபுணர்களும், அரசியல் ஆலோசகர்கள் பலரும் மத்திய பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து, சாதக, பாதக அம்சங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் சுப்பிரமணிய சாமியோ, பட்ஜெட் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் டிவிட்டரில் ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு சர்ச்சையை அதிகரித்துள்ளார். அந்தப் பதிவில், நான் எந்தப் மக்கள் இருந்து இந்த பட்ஜெட் குறித்து கருத்து கூறுவது? ஒரு பொருளாதார பேராசிரியராக அணுகுவதா ? அல்லது கட்சியின் எம்.பி. என்ற ரீதியில் இந்த பட்ஜெட்டை பார்ப்பதா? எந்தப் பக்க நியாயத்தை எடுத்துரைப்பது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சாமியின் இந்தப்பதிவில் இருந்தே பட்ஜெட்டில் அவருக்கு திருப்தி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இருந்தாலும், ஐயா பொருளாதார மேதையே... தலை சிறந்த பொருளாதார பேராசிரியர் என்ற ரீதியிலேயே கருத்துக் கூறுங்கள் என்று இப்போது பதிலுக்கு பலரும் பதிவிட்டு சாமியை உசுப்பேற்றி வருகின்றனர். இதனால் சு.சாமி, பட்ஜெட் குறித்து வெளிப்படையாக தனது கருத்தைக் கூறி என்ன குழப்பம் செய்யப் போகிறாரோ? என்ற பீதியில் பாஜக தரப்பினர் உள்ளனர் என்றே கூறலாம்.

You'r reading மத்திய பட்ஜெட் எப்படி..? எந்தப் பக்கம் கருத்து சொல்வது..?- சர்ச்சையான சு.சாமியின் டிவிட் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை