ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராவதால், சிதம்பர ரகசியங்கள் விரைவில் அம்பலமாகும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கிண்டலடித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான பிடி இறுகுகிறது.
மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த 2007ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் 15ம் தேதி, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக நீதிமன்றம் அனுமதித்துள்ளதால், பல தகவல்களை அவர் வெளியிட வாய்ப்பு உள்ளது. இது ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு நெருக்கடியைத் தரலாம்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த செய்தியை பதிவிட்டு, ‘சிதம்பர ரகசியங்கள் விரைவில் அம்பலம்?’’ என்று கிண்டலடித்துள்ளார்.