ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத்தாக்கலும் நடைபெற்று வருகிறது. இந்த 6 இடங்களில் திமுகவும், அதிமுகவும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் தொழிற்சங்கத்தின் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இடத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் வைகோ வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வைகோ வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்பு, திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுத்தாக்கலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுகன் க.பொன்முடி, | எ.வ.வேலு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகளும், மதிமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.