அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.க்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் முட்டி மோத, யாருமே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சேலம் மாவட்டம் மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமகவுக்கும் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களில், திமுகவும், அதிமுகவும் தலா 3 இடங்களை கைப்பற்றுவது உறுதி. இதில் திமுக சார்பில், சண்முகம், வில்சன் ஆகியோரும், மற்றொரு இடத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவில் ஒரு இடம் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மீதியுள்ள 2 இடங்களைப் பிடிக்க அதிமுக மூத்த நிர்வாகிகளான முன்னாள் துணை சபாநாயகர் தம்பித்துரை, முன்னாள் அமைச்சர் மைத்ரேயன், முன்னாள் எம்.பி.க்கள் மைத்ரேயன், அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் என பலர் முட்டி மோதினர். இதனால் வேட்பாளர் அறிவிப்பு இழுபறியாகிக் கிடந்தது.
இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சேலம் மாவட்டம் மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இடம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்தபடி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
மேலும் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற உள்ள வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமே மீண்டும் போட்டியிடுவார் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். அதிமுகவில் யாருமே எதிர்பார்க்காத வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.