பா.ஜ.க.வினர் அதிகார மமதையில் அதிகாரிகளை தாக்குகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும், எம்.எல்.ஏவுமான ஆகாஷ் வர்கியா, நகராட்சி அலுவலரை கிரிக்கெட் பேட்டால் அடித்து தாக்கிய வீடியோ காட்சி நாடு முழுவதும் வைரலாக பரவியது. ஆகாஷின் செயலுக்கு பலத்த கண்டனங்கள் எதிரொலிக்கவே, பிரதமர் மோடியும் இது போன்ற செயல்களை அனுமதிக்கவே முடியாது என்று கண்டித்திருந்தார்.
அதன்பின், இரண்டே நாட்களில் உ.பி.யில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஆக்ரா எம்.பி. ராம்சங்கர் கத்தாரியாவின் ஆட்கள், நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடியில் தகராறு செய்த வீடியோ வெளியானது. அதில், கத்தாரியாவின் பாதுகாவலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காட்சியும் இடம்பெற்றிருந்தது. இதற்கும் நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘பா.ஜ.க.வினர் அதிகார போதையில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்குகிறார்கள். சுங்கச் சாவடி ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு மிரட்டுகிறார்கள். அவர்களை மக்கள் ேசவையாற்றுவதற்காக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதை செய்யாமல் இப்படி செய்கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?’’ என்று கூறியுள்ளார்.