சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டனர். தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சத்யா எம்எல்ஏவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி நடத்திய முற்றிகைப் போராட்டத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான சத்யா, கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கட்சியின் மாவட்டப் பொறுப்புகளுக்கு பணம் வாங்கிக்கொண்டு மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களை நியமிப்பதாகவும், கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்க மறுப்பதாகவும் கூறி, 500 -க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். திடீரென அவர்கள் அதிமுக தலைமை அலுவலகம் உள்ளே நுழைந்து சத்யாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சத்யாவை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அங்கு போலீசார் சிலர் மட்டுமே இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு முற்றுகையில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பேச்சுவார்ததை நடத்திய பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதிமுகவினரின் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.