‘பல ஆண்டுகளுக்கு முன்பு மோடி எனக்கு கொடுத்த 250 ரூபாய் பரிசுதான் இன்று இந்த அளவுக்கு உயரே கொண்டு வந்திருக்கிறது’’ என்று குஜராத் நாட்டுப்புற பாடகி கீதா ரபாரி தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி பிரபலமாகியிருப்பவர் கீதா ரபாரி. இந்த பெண் பாடிய ‘ரோனா செர்மா’ என்ற பாடல் வீடியோவை, யூ டியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 25 கோடியைத் தாண்டியுள்ளது. இது குஜராத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள யூ டியூப் நேயர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கீதா ரபாரி பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற விரும்பினார். அவருக்கு உடனடியாக பிரதமரின் அப்பாயின்மென்ட் கிடைத்தது. காரணம், இந்த இளம்பெண் சிறுமியாக இருந்த போது, அந்த சமயத்தில் குஜராத் முதல்வரான மோடியிடம் ஆசி பெற்று அறிமுகமானவர் என்பதுதான்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய கீதா ரபாரி, அதன்பின் கூறுகையில், ‘‘நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த போது மோடியை சந்தித்து ஆசி பெற்றேன். அப்போது எனது பாடல்களை கேட்டு அவர் 250 ரூபாய் பரிசு கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். பெரிய பாடகியாக வருவாய் என்று அவர் வாழ்த்தியது போலவே, இப்போது பிரபலமான நாட்டுப்புற பாடகியாகி இருக்கிறேன். எனது ரோனா செர்மா வீடியோவை 25 கோடிப் பேர் பார்த்து ரசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
கீதா சந்திப்புக்கு பின்னர், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘கீதா சிறந்த பாடகியாக வளர்ந்துள்ளார். அவர் உலக அளவில் குஜராத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவர் சிறுமியாக இருந்த போதே அவரை வாழ்த்தியது நினைவுக்கு வருகிறது. இப்போது அவருடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. அவரை போன்றவர்கள் நமது சமுதாயத்திற்கு ஊக்கம் அளிப்பவர்கள். குஜராத்தி இளைஞர்கள் மத்தியில் நாட்டுப்புற பாடல்களை பரப்பி வரும் அவரது முயற்சிகளை பாராட்டுகிறேன். அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.