கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பதற்கு இன்று விடை தெரிந்துவிடும் போல் தெரிகிறது. அதிருப்தி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 13 பேரின் ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளதால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்- மஜத கூட்டணி அரசின் ஓராண்டு கால ஆட்சியில் குழப்பம் மேல் குழப்பம் தான். இப்போது அந்தக் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டி விட்டது. கடந்த 4 நாட்களில் கர்நாடக அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு, இப்போது க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டிவிட்டது.
முதலில் காங்கிரஸ் மற்றும் மஜதவின் 13 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்து விட்டு பத்திரமாக மும்பையில் பதுங்கி விட்டனர். அடுத்தபடியாக அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேட்சைகள் நாகேஷ், சங்கர் ஆகிய 2 பேரும் ஆதரவு வாபஸ் என்று அறிவித்து அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் ஆட்சியைத் தக்க வைக்கவும், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தவும் காங்கிரசும், மஜதவும் கடைசிக்கட்ட அதிரடி முயற்சிகளை மேற்கொண்டது. திடீர் திருப்பமாக முதல்வர் குமாரசாமி தவிர்த்து அமைச்சரவையில் உள்ள அனைவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி ஆசை காட்டி, அவர்களின் ராஜினாமா முடிவை வாபஸ் பெற வைக்கவே இந்த முடிவு என்று கூறப்படுகிறது. இதனால் பெங்களூருவில் காங்கிரஸ், மஜத தலைவர்கள் ஒரு பக்கம் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வர, பாஜகவும் எப்படியும் ஆட்சியைக் கவிழ்த்து, ஆட்சி அரியணையில் ஏறிவிட பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ராஜினாமா செய்த ஆளும் தரப்பு அதிருப்தி எம்எல்ஏக்களை மும்பையில் பத்திரப்படுத்தி வைப்பதில் பாஜகவின் கைங்கர்யம் தான் உள்ளது என்பது அப்பட்டமாகி விட்டது.இந்நிலையில் மேலும் சில எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்க பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பாஜக தலைவர் எடியூரப்பாவும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? தப்பிப் பிழைக்குமா? என்பதற்கு இன்று சபாநாயகர் ரமேஷ்குமார் எடுக்கவுள்ள அதிரடி முடிவு மூலம் தெரியப் போகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை இன்று சபாநாயகர் பரிசீலிக்க உள்ளார். அப்போது ராஜினாமாவை ஏற்பாரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.13 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கும் பட்சத்தில் குமாரசாமி அரசு, பெரும்பான்மையை இழப்பது உறுதியாகிவிடும். ராஜினாமாவை ஏற்காமல் இழுத்தடித்தால் அரசியல் குழப்பம் மேலும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என்ற நிலை உள்ளது. இதனால் ஆளுநர் வஜுபாய் வாலாவின் மூலம் குமாரசாமி அரசுக்கு பாஜக தரப்பு நெருக்கடி கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.