உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா. எனினும், டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் கடைசி வரை போராடி, வெற்றிக்கு பாடுபட்டது ரசிக்கக் கூடியதாக இருந்தது.
இந்நிலையில், இறுதி வரை போராடிய இந்திய அணிக்கு பிரதமர் மோடியும், ராகுல்காந்தியும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘வருந்தத்தக்க முடிவுதான். ஆனாலும், இந்திய அணி கடைசி வரை துடிப்புடன் போராடியது சிறப்பு. இந்தியா இந்த தொடரில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எல்லாவற்றிலும சிறப்பாக விளையாடியது குறித்து நாம் பெருமை கொள்வோம். வெற்றி, தோல்விகள் வாழ்க்கையின் அங்கம்தான். வருங்காலத்தில் சிறந்த வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்றிரவு நூறு கோடி மக்களின் இதயங்கள் உடைந்து போனாலும், இந்திய அணி மிகப் பெரிய போராட்டம் நடத்தியிருக்கிறது. எங்கள் அன்புக்கும், மரியாதைக்கும் உரித்தானவர்கள் நீங்கள்.
உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு பாராட்டுகள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.