பாஜக மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சகஜமாகி விட்டது. இப்போது, உத்தரகாண்டில் அந்த கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் இரு கைகளிலும் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஆகாஷ் வர்கியா, கிரிக்கெட் பேட்டால் நகராட்சி ஊழியரை தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடியே கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகு, ஆக்ரா பாஜக எம்.பி. ராம்சங்கர் கத்தாரியா, சுங்கச்சாவடியில் தகராறு செய்தார். அவரது பாதுகாவலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதுவும் சர்ச்சையானது.
இப்போது அந்த வரிசையில் உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏ. பிரணவ் சாம்பியன் சிக்கியுள்ளார். இவர் மீது ஏற்கனவே கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் போதையில், இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் இரண்டு கைகளிலும் துப்பாக்கி வைத்து கொண்டு ஆடுகிறார்.
இந்த வீடியோ வைரலானதும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘என்னை மீடியா குறிவைத்து தாக்குகிறது. வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். நான் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறேன். குடித்து விட்டு டான்ஸ் ஆடுவது தப்பா? லைசென்ஸ் உள்ள துப்பாக்கியை கையில் வைத்திருப்பது தப்பா?’’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இது குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் அனில் பலூனி கூறுகையில், ‘‘இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து உத்தரகாண்ட் பாஜக தலைமையிடம் விசாரிக்கப்படும்’’ என்றார்.