வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுமா? மோடி எதிர்ப்பு அலை வேலூரிலும் தொடருமா? இதுதான் இப்போதைய தமிழக அரசியலின் பரபரப்பு.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் பா.ஜ.க. அலை வீசினாலும், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைதான் வீசியது. பா.ஜ.க. மட்டுமில்லாமல் பா.ம.க, தே.மு.தி.க, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் என்று அதிமுக பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், மோடி எதிர்ப்பு அலையில் மூழ்கி விட்டது. அந்த கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரகுமார் மட்டுமே வெற்றி பெற்றார். மேலும், இந்த தேர்தலுடன் நடத்தப்பட்ட 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் 9 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.
இதற்கிடையே, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் பணபட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர். பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருந்த போது கதிர் ஆனந்திற்கு நெருக்கமான சிமென்ட் குடோனில் நடந்த ரெய்டில் கட்டுக்கட்டாக 11 லட்சம் ரூபாய் பணமும், வாக்காளர்களுக்கு விநியோகிப்பது தொடர்பான குறிப்புகளும் சிக்கின. அதே சமயம், ஏ.சி.சண்முகம் தரப்பிலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் அதிகாரிகளின் கவனம் அந்தப் பக்கம் போகவில்லை.
இந்த சூழலில், நிறுத்தப்பட்ட வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 9ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி விட்டது. தேர்தல் பிரச்சாரம் இன்னும் தொடங்கவில்ைல. ஆயினும், அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுமே ஆரம்பக்கட்டப் பணிகளை தொடங்கி விட்டன. இரு கட்சிகளுக்குமே இந்த தேர்தல் என்பது கவுரவப் பிரச்னையாகி விட்டது.
அதிமுக அணியில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்தான் போட்டியிடுகிறார். அதனால் தோற்றாலும் பரவாயில்லை என்று அதிமுக விட்டுவிடவில்லை. காரணம், இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், ‘‘அதிமுகவின் இமேஜ் இன்னும் சரிந்து விடவில்ைல. கட்சி மீண்டும் ஜெயலலிதா காலத்து அதிமுகவாக பலம் பெற்று விட்டது’’ என்று சொல்லிக் கொள்ளலாம். மேலும், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றதற்கு மோடி எதிர்ப்பு அலைதான் காரணம். அதிமுக அரசு மீது மக்களுக்கு கோபம் இல்லை’’ என்றும் ஓங்கிச் சொல்லலாம். இன்னும் ெசால்லப் போனால், ஸ்டாலினை விட எடப்பாடி பழனிச்சாமி ஆளுமைமிக்கத் தலைவர் என்று கூட மார்தட்டிக் ெகாள்ளலாம். அதனால், வரும் 20ம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் மொத்த அமைச்சர்களும் வேலூரில் முகாம் போடப் போகிறார்களாம்.
இதே போல்தான், திமுகவும் இந்த தேர்தலை கவுரவப் பிரச்னையாக கருதுகிறது. காரணம், இதில் தோற்று விட்டால் ஏற்கனவே பெற்ற வெற்றி, மோடி எதிர்ப்பு அலையால் பெற்ற வெற்றி, ஸ்டாலின் தலைமைக்கு கிடைத்த வெற்றி அல்ல என்று பேசத் தொடங்கி விடுவார்கள். அதை விட பெரிய விஷயம் என்னவென்றால், ஏற்கனவே வெற்றி பெற்றதற்கு காரணம் ராகுலுக்காக மக்கள் போட்ட ஓட்டுகள்தான் என்று காங்கிரசார் கூட பேசுவார்கள். எனவே, ஸ்டாலின் தலைமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்கிறது.
இந்த தேர்தலில் தற்போதைய நிலையில் பார்த்தால், திமுகவுக்கு சில சாதகங்கள் உள்ளன. இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ள வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில், அவர்கள் இன்னமும் மோடி எதிர்ப்பு உணர்வில்தான் இருக்கலாம் என்பதால், திமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்பிருக்கிறது. வடநாட்டில் ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்லக் கூறி தாக்குதல் நடைபெறும் தகவல்களால், இஸ்லாமியர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கலாம் என கருத வேண்டியுள்ளது. மேலும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. ஆம்பூரில் திமுகவின் வில்வநாதன் 37,767 வாக்குகள் வித்தியாசத்திலும், குடியாத்தத்தில் திமுகவின் காத்தவராயன் 27,841 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றுள்ளனர்.
எனவே, இதே மனநிலையில் மக்கள் வாக்களித்தால், 2 சட்டமன்றத் தொகுதிகளிலேயே 65 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கும். எனவே, 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறலாம்.
அதே சமயம், அதிமுக தனது அணுகுமுறையை மாற்றியிருக்கிறது. அதாவது பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் சிறுபான்மையினர் விஷயத்தில் அதிமுக பழைய கொள்கைகளைத்தான் பின்பற்றும் என்று காட்ட முனைந்திருக்கிறார்கள். அதன் அடையாளமாகத்தான் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் அமைச்சர் முகமத் ஜானுக்கு வாய்ப்பு தந்துள்ளார்கள். அவர் வேலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே, இஸ்லாமியர்களின் வாக்குகளை திமுகவிடம் இருந்து பகுதியாவது பிரிக்க வாய்ப்பிருக்கிறது.
அடுத்ததாக, மோடியைப் பற்றியோ, பா.ஜ.க.வைப் பற்றியோ வாய் திறக்காமல் அதிமுக பிரச்சாரம் செய்யலாம். அத்தனை அமைச்சர்களும் அணி திரளுவதாலும், தேர்தல் அதிகாரிகளை ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட வைப்பதிலும் இன்னும் சாதகங்களை அடைய அதிமுக முயற்சி செய்யும்.
இந்த சூழ்நிலையில், டி.டி.வி.தினகரனுடைய அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இருந்து ஒதுங்கி விட்டன. அவற்றின் வாக்குகள் எந்தப் பக்கம் போகும் என்பது தெரியவில்லை. பொதுத் தேர்தலின் போது வேலூருக்கும் தேர்தல் நடந்திருந்தால் கதிர்ஆனந்த் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக இருந்திருக்கும். ஆனால், இப்போது அந்த வெற்றியை தட்டிப் பறிக்க அதிமுக முயற்சிக்கிறது. அது நடக்குமா என்பது போகப் போகத் தெரியும்.