தெலங்கானாவில் பெண் தாசில்தார் ஒருவரின் வீட்டில் இருந்து ரூ.93.5 லட்சம் மற்றும் 400 கிராம் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், கேசம்பேட்டையில் ஒரு விவசாயி தனது நிலத்திற்கு பட்டா வாங்குவதற்காக வி.ஏ.ஓ. ஆனந்தய்யாவை சந்தித்திருக்கிறார். அவரிடம் 8 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார் ஆனந்தய்யா. அந்த விவசாயி அட்வான்ஸாக ரூ.30 ஆயிரம் கொடுத்து விட்டு, பின்பு ரகசியமாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் 4 லட்சம் ரூபாயைக் கொடுத்து, ஆனந்தய்யாவிடம் கொண்டு போய் கொடுக்கச் சொன்னார்கள்.
அந்த விவசாயி அந்த பணத்தை ஆனந்தய்யாவிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். அவரிடம் விசாரித்த போது, இந்த 4 லட்சம் ரூபாயில் 3 லட்சம் தாசில்தார் லாவண்யாவுக்காக வாங்கியது என்று கூறி விட்டார்.
இதைத் தொடர்ந்து, லாவண்யா வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 50 பவுன் நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்ததுடன், லாவண்யாவை கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த தாசில்தார் லாவண்யா 2 வருடங்களுக்கு முன்பு சிறந்த தாசில்தார் விருது வாங்கியவராம். இப்போது அதை எல்லோரும் கிண்டலடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம். இப்போதெல்லாம், தாசில்தார் வீட்டில் ஒரு கோடி என்பது சாதாரணம்தான் என்றாலும், அந்த பெண் தாசில்தார் வசமாக சிக்கி விட்டார். சிக்காத பல கோடீஸ்வர தாசில்தார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.