கூவம், அடையாறு நதிகளை பாதுகாக்கத் தவறிய தமிழக அரசுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆறுகளில் பாதிக்கும் மேற்பட்ட பரப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. ஒரு காலத்தில் பெரிய ஆறுகளாக இருந்தவை தற்போது பல இடங்களில் கால்வாய் அளவுக்கு சுருங்கி விட்டன. இந்நிலையில், இந்த ஆறுகளை பாதுகாக்கத் தவறிய தமிழக அரசின் பொதுப்பணித் துறை மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஜவகர்லால் சண்முகம் என்பவர் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஆறுகளை பாதுகாக்கத் தவறிய பொதுப்பணித் துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. மேலும், சுற்றுச்சூழலை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கும், சீரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்கள் மற்றும் இந்திய அறிவியல் கழகம், நீரி ஆமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் எகனாமிஸ்ட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதில், ஆறுகளை காக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தீர்ப்பாயம் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறியது. ஆனால், அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.