கோவாவில் பாஜகவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இணைத்ததற்கு, கூட்டணியில் உள்ள கோவா பார்வர்டு கட்சித் தலைவரும் துணை முதல்வருமான விஜய் சர்தேசாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மைனாரிட்டி பாஜக எரதக்கு இதுவரை ஆதரவளித்து வந்த தங்களை கழற்றி விடகோவா மாநில பாஜகவினர் முயற்சிப்பதாகவும் சர்தேசாய் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த போது, 40 பேர் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 15 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். கூட்டணியில் இருந்த கோவா பார்வர்ட் பார்ட்டியின் 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் தயவில் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரசுக்கு 17 எம்எல்ஏக்கள் இருந்தும், கூடுதல் இடங்களைப் பெற்றிருந்த அக்கட்சியை முதலில் ஆட்சி அமைக்க அழைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரிக்கர் அமைச்சரவையில் கோவா பார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய் துணை முதல்வராக இருந்தார்.
மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பின்னர், பிரமோத் சாவந்த் இப்போது முதல்வராக உள்ளார். இவருடைய அமைச்சரவையிலும் விஜய் சர்தேசாயுடன், பாஜகவின் மனோகர் அஜான்கர் ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக உள்ளனர்.காங்கிரசின் 2 எம்எல்ஏக்கள் ஏற்கனவே பாஜகவில் இணைந்ததால் அக்கட்சியின் பலம் 17 ஆக இருந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் நேற்று பாஜகவில் இணைந்து விட்டனர். இதனால் பாஜக 27 எம்எல்ஏக்களுடன் மெஜாரிட்டி பலம் பெற்றுள்ளது.
இதனால் தற்போது பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக இதுவரை அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கோவா பார்வர்ட் பார்ட்டி மற்றும் சுயேச்சைகளை கழற்றி விட மாநில பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக காங்கிரசில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பாஜகவில் இணைந்த சந்திரகாந்த் காவ்லேகருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது.
கோவாவில் அரங்கேறி வரும் இந்த அதிரடி திருப்பங்களால், பாஜகவின் கூட்டணிக் கட்சியான கோவா பார்வர்டு கட்சியின் தலைவரும் துணை முதல்வருமான விஜய் சர்தேசாய் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்களை தற்போது அவசரமாக இழுக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களை நம்ப முடியாது. பதவிக்காக எதையும் செய்வார்கள். இப்போது எங்களை கூட்டணியில் இருந்து கழட்டி விட பாஜக மாநில தலைவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர்.
இதற்கெல்லாம் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் தான் காரணம். எங்களுக்கும் மாநில பாஜக தலைவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாஜக மேலிடத் தலைவர்கள் மூலமாகத்தான் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முடிவு செய்யப்பட்டன. இப்போதும் இந்தப் பிரச்னையை தீர்க்க வேண்டியது அமித்ஷா தான். அவரிடம் பிரச்னையை கொண்டு செல்வேன் என்று விஜய் சர்தேசாய் கூறியுள்ளது கோவா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.