கோவாவில் எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் உள்பட காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவிய நிலையில், இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்கின்றனர்.
கர்நாடகத்தில், பாஜகவின் உள்ளடி வேலைகளால் ஆட்சியைத் தக்க வைக்க காங்-மஜத கூட்டணி படாத பாடுபடுகிறது. அங்கு ஆட்சியே கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவா மாநிலத்திலும் காங்கிரசை சைலண்டாக காலி செய்துள்ளது பாஜக. 40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்துள்ள பாஜக,மாநிலக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தி வருகிறது. 17 எம்எல்ஏக்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏற்கனவே 2 எம்எல்ஏக்களை தங்களுக்கு ஆதரவாக அணி மாறச் செய்திருந்தது பாஜக .
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ் லேகர் தலைமையில் 10 எம்எல்ஏக்கள் திடீரென பாஜகவில் ஐக்கியமாகி, காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதனால் கோவா சட்டப்பேரவையில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசின் பலம் 17ல் இருந்து 27 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசின் பலமோ 5 ஆகிவிட்டது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் செல்வாக்கை சீர்குலைத்தது போல், கர்நாடகத்திலும் காங்கிரசை பலவீனப்படுத்திவிட்டது பாஜக என்றே கூறலாம். 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த கையோடு, மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உடன் இன்று அதிகாலையில் டெல்லி சென்று சேர்ந்துள்ளனர். டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்கின்றனர். அப்போது அணி மாறிய எம்எல்ஏக்கள் பலருக்கும் அமைச்சர் பதவி உட்பட முக்கிய பொறுப்புகள் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.