உ.பி.யில் ஆக்ரா அருகே அரசுப் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
உ.பி.மாநில தலைநகர் லக்னோவில் இருந்து டெல்லிக்கு, அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இரு அடுக்குகளைக் கொண்ட இந்தப் பேருந்தில் 44 பயணிகள் இருந்தனர். யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் அதிவேகமாகச் சென்ற இந்தப் பேருந்து இன்று காலை ஆக்ரா அருகே விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்து, கால்வாய் ஒன்றில் தலைகுப்புற கவிழ்ந்தது.
கால்வாயில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில், 44 பேருடன் பேருந்து 15 ஆழ தண்ணீரில் மூழ்கியது. உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்று, பேருந்தை வெளியில் எடுத்த போது 29 பயணிகள் தண்ணீரில் மூச்சுத் திணறி இறந்தது தெரிய வந்தது. 15 பேர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கோர விபத்து தகவல் உறிந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், விபத்து குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.