‘‘மத்திய அரசை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தேசவிரோதி(ஆன்டி நேஷனல்) என்று சித்தரிக்கிறார்கள். நமக்கு யாருடைய சர்டிபிகேட்டும் தேவையில்லை. நாம் எதற்கும் பயப்படக் கூடாது’’ என்று பிரபல பாலிவுட் நடிகை ஷப்னா ஆஸ்மி பேசியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் ஆனந்த் மோகன் மாத்தூர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நடிகை ஷப்னா ஆஸ்மிக்கு சிறந்த பெண்களுக்கான கன்டி மாத்தூர் விருது வழங்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்டு அவர் பேசுகையில், ‘‘ நாட்டின் நன்மைக்கு நாம் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். அப்படி சுட்டிக்காட்டா விட்டால், எப்படி நாடு முன்னேறும்? ஆனால், நாட்டில் இப்போது மத்திய அரசை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கிறார்கள்.
நமக்கு யாருடைய சர்டிபிகேட்டும் தேவையில்லை. நாம் யாருக்கும் பயப்படக் கூடாது. நமது நாடு பன்முக கலாச்சாரம் கொண்டது. அதை பாதுகாக்க நாம் போராட வேண்டும். பயந்து மண்டியிடக் கூடாது. மக்களை பிரிக்க நினைப்பது நாட்டுக்கு நல்லதல்ல’’ என்றார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் பேசுகையில், ‘‘மகாத்மாவைக் கொன்ற நாதுராம் கோட்சேயை தேசபக்தராக சித்தரிக்கிறார்கள். அவருக்கு இப்போது சிலை வைக்கப் போகிறார்களாம். நான் இதை அனுமதிக்கப் போகிறோமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.