காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை போதைப் பொருள் பயன்படுத்துபவர் என்று சொன்ன பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி மீது சட்டீஸ்கரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி, கோகய்ன் எனப்படும் போதைப்பொருளை பயன்படுத்துகிறார் என்று சுப்பிரமணிய சாமி விமர்சித்திருந்தார். இது காங்கிரஸார் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலமான சட்டீஸ்கரில் சாமி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜஸ்பூர் மாவட்டக் காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால், அங்குள்ள பதல்கான் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணிய சாமி மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ‘‘ராகுலுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை தெரிந்தே சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். இதனால், காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது.
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதனடிப்படையில், சாமி மீது இ.பி.கோ. 504, 505(2), 511 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை கண்காணிப்பாளர் சங்கர்லால் பகல் தெரிவித்துள்ளார்.