வருங்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர் ஐபேடு கொண்டு வந்து பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று ப.சிதம்பரம் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாவது:-
மத்திய அரசின் செலவு எவ்வளவு? வருவாய் பற்றாக்குறை எவ்வளவு? எந்த பிரச்னையில் அரசு அச்சம் கொள்கிறது? ராணுவத்துக்கு அரசு எவ்வளவு செலவிடுகிறது என்ற எதுவுமே பட்ஜெட் உரையில் இல்லை. பட்ஜெட் ஆவணங்களில் அவை இருக்கலாம். அந்த ஆவணங்கள் எம்.பி.க்களுக்கும், அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் கிடைக்கும். ஆனால், பட்ஜெட் உரையைப் பார்த்த மக்களுக்கு அதெல்லாம் கேட்பதற்கு ஆர்வம் இருக்காதா?
சாமான்ய மக்களின் குரல்களுக்கோ, பொருளாதார நிபுணர்களின் குரல்களுக்கோ நிதியமைச்சர் செவிசாய்க்காமல், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போக செய்து விட்டது.
மத்திய அரசு, மக்களிடம் எதையோ மறைக்க முயற்சிக்கிறது. வருமானவரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்றால் என்ன பொருள்? புள்ளிவிவரங்களில் எந்த வெளிப்படைத் தன்மையையும் இந்த பட்ஜெட்டில் கடைபிடிக்கவில்லை.
இவ்வாறு சிதம்பரம் கூறினார். இதையடுத்து, அவரிடம் ‘‘பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிமைச் சின்னமாக இருக்கும் சூட்கேஸை பயன்படுத்தாமல், பட்ஜெட் ஆவணங்களை இந்திய பாரம்பரியத்தின்படி துணியால் சுற்றிக் கொண்டு வந்தாரே நிதியமைச்சர்?’’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிதம்பரம், ‘‘எழுதி வைத்து கொள்ளுங்கள். வருங்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர் ஐபேடில் பட்ஜெட் தாக்கல் செய்வார்’’ என்று கிண்டலாகக் கூறினார்.