ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளால் கடுமையாக பாதித்திருந்த இலங்கை சுற்றுலா தொழில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இன்றும், கட்டாயம் பார்க்க வேண்டிய நாடாக இலங்கை இருப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை திடீரென பாதியாக சரிந்தது. ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 63,072 ஆக இருந்தது. இதுவே கடந்த ஆண்டில் இதே ஜுன் மாதத்தில் ஒரு லட்சத்து 46,828 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
எனினும், மே மாதத்தில் 37,802 சுற்றுலா பயணிகளே வந்திருந்த நிலையில், ஜூனில் 63 ஆயிரத்தை விட அதிகரி்த்தது, அந்நாட்டு சுற்றுலாத் துறை மீண்டும் ஏற்றப்பாதையில் செல்வதை சுட்டிக் காட்டியது.
லோன்லி பிளானட் என்னும் டிராவல் பத்திரிகை இந்த ஆண்டின் துவக்கத்தில், உலகத்தில் மக்கள் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த சுற்றுலாதலம் என்று இலங்கையை அறிவித்திருந்தது. ஈஸ்டர் தின குண்டு வெடிப்புக்குப் பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்த நிலையில், இலங்கை அந்த இடத்தை இழந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த வாரம் அந்த பத்திரிகை வெளியிட்ட அறிக்கையிலும், உலகில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாக இலங்கை இன்னும் உள்ளது. இலங்கை மக்கள் இன்முகத்துடன் வரவேற்பார்கள் என்றும், இலங்கை பார்க்க வேண்டிய இடம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ‘‘லோன்லி பிளானட் பத்திரிகையின் இப்போதைய அறிக்கை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எமது அரசு சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.