இலங்கையில் சில தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் தப்பியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெறலாம் என்றும், மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என்று எட்டு இடங்களில் பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 10 பேரும் அடங்குவர். மேலும் 500 பேர் வரை காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், கொழும்பில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டுகளுடன் தப்பியோடி இருக்கலாம். அவர்கள் இலங்கைக்குள் நடமாடிக் கொண்டிருக்கலாம். எனவே, மீ்ண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது. மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதை கவனித்து வருகிறோம். இலங்கையில் உள்ள தீவிரவாதிகளுக்கு இன்னும் அதிக தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரணையை நடத்தி வருகிறோம். இலங்கைவாசிகள், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சென்று பயிற்சி பெற்று வந்திருப்பார்கள் என்ற சந்தேகமும் இருக்கிறது. பாதுகாப்பு படைகள் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறு ரணில் தெரிவித்தார்.