ஆந்திர சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கூச்சலிட, நாங்கள் 150 பேர்... பதிலுக்கு எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று ஜெகன் மோகன் ஆவேசம் காட்டியதால் சட்டப்பேரவையில் பரபரப்பானது.
ஆந்திர மாநிலத்தில் மக்களவை பொதுத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது சந்திரபாபு நாயுடுவை முதல்வர் பதவியில் இருந்து வீழ்த்திய, ஒய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வரானார். மொத்தபாள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில்151 இடங்களில் ஒய்எஸ்ஆர் கட்சி வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்கள் மட்டுமே கிடைத்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
இந்நிலையில் ஆந்திர சட்டமன்றத்தில் இன்று மாநிலத்தில் நிலவி வரும் வறட்சி தொடர்பாக பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசத்தையும் சந்திரபாபு நாயுடுவையும் கடுமையாகக் குற்றம்சாட்டிப் பேசினார். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க முன்னர் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, ஒரு பைசாவைக் கூட ஒதுக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது தகுதியை மீறி செயல்படுவதாகவும், விவசாய கடன் வழங்குவதில் தவறான தகவல்களை கூறுவதாகவும் குற்றம்சாட்டினர். அப்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது. ஜெகன் பேசிக்கொண்டிருக்கும் போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சந்திரபாபு நாயுடு ரூ.5 கோடியில் கட்டிய ஆடம்பர கட்டடம் இடிப்பு
இதனால் ஆவேசமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி, உங்களுடைய இந்த கூச்சல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபட மாட்டேன். எங்களிடம் 150 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று உரத்த குரலில் கூறியதால் ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சந்திரபாபு நாயுடுவைப் பார்த்து, ஒருவர் உயரமாக வளர்ந்திருந்தால் மட்டுமே பெரிய ஆள் கிடையாது. முதலில் புத்தி வளர வேண்டும் என கடுமையாக ஜெகன் மோகன் ரெட்டி சாடியதால் பேரவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.