சந்திரபாபு நாயுடு ரூ.5 கோடியில் கட்டிய ஆடம்பர கட்டடம் இடிப்பு

Demolition of Praja Vedika building constructed by Chandra babu Naidu govt in Andhra starts

by Nagaraj, Jun 26, 2019, 11:50 AM IST

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது தனது ஆடம்பர பங்களா அருகிலேயே ரூ 5 கோடி செலவில் கட்டிய கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின், ஆந்திராவின் தலைநகரை அமராவதிக்கு மாற்றினார் சந்திரபாபு நாயுடு . அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு ஆடம்பர பங்களாவையும் கட்டி சந்திரபாபு நாயுடு குடியேறினார்.

 

இதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு தான் குடியிருக்கும் ஆடம்பர பங்களாவின் அருகிலேயே ரூ.5 கோடி மதிப்பில் பிரஜா வேதிகா என்ற பிரமாண்ட கட்டடத்தையும் கட்டினார். தன் கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு இந்த கட்டடத்தை பயன்படுத்தி வந்தார்.
இந்த பிரஜா வேதிகா கட்டடம் கட்டும்போதே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. விதிமுறைகளை மீறி ஆபத்தான நதிக்கரைக்கு அருகில் கட்டுவதாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.

 

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார். பதவியேற்ற உடனேயே இந்த பிரஜா வேதிகா கட்டடத்தை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி முடிவெடுத்திருந்தார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை நேற்று இந்த பிரஜா வேதிகா கட்டடத்தில் ஜெகன் மோகன் ரெட்டி நடத்தினார்.


அப்போது, பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விதிகளை மீறி நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது என்பதால் பிரஜா வேதிகா இடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன் உத்தரவிட்டார். அதன்படி இன்று கட்டடம் இடிக்கும் பணி தொடங்கியது.


ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானவுடன் அவருக்கு சந்திரபாபு நாயுடு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், பிரஜா வேதிகா கட்டடத்தை தானே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை ஜெகன் மோகன் ரெட்டி அரசு நிராகரித்து விட்டதுடன் அதை இடிக்கவும் உத்தரவிட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியால் துவண்டு போயிருந்த சந்திரபாபு நாயுடு, அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். 20 நாட்களுக்குப் பின்பு நேற்று இரவு தான் ஆந்திரா திரும்பிய அவர் அமராவதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அருகிலுள்ள பிரஜா வேதிகா கட்டடத்தை இடிப்பதற்கான முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் மும்முரமாக இருந்தனர். இதனால் சந்திரபாபு நாயுடுவை மட்டும் அவருடைய வீட்டிற்குச் செல்ல அனுமதித்த போலீசார், அவருடைய கட்சியினர் அனைவரையும் திருப்பி அனுப்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு அலுவலகத்தை காலி செய்த ஆந்திர அரசு; சாமான்களை தூக்கி போட்டது

You'r reading சந்திரபாபு நாயுடு ரூ.5 கோடியில் கட்டிய ஆடம்பர கட்டடம் இடிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை