சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று முன்தினம் இரவு தாறுமாறாக ஓடிய கார் ஒன்று ஆட்டோவிலும், மின்கம்பத்திலும் மோதி நின்றது. இதையடுத்து கார் ஓட்டி வந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர்.
அப்போது கார் ஓட்டி வந்த வாலிபர் மதுபோதையில் இருந்ததால் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அங்கு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி மற்றும் தலைமை காவலர் இளவரசன் ஆகியோரிடம் ஆபாசமாக பேசிய அந்த இளைஞர் அவர்களை அடிக்கவும் முற்பட்டார்.
இதனையடுத்து போதையில் இருந்த அந்த நபரை சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அழைத்துச் சென்று மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காவலர்களை அடிக்க முற்பட்டு, ஆபாசமாக பேசியதால் நீலாங்கரை காவல் நிலையத்தில் வாலிபரை ஒப்படைத்தனர். நீலாங்கரை போலீசார் கொலை மிரட்டல் ஆபாசமாக பேசுதல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் மதுரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் புள்ளி ஒருவரின் மகன் நவீன் என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு நவீனை போலீசார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நேற்று இரவு புழல் சிறையில் அடைத்தனர்.