ஆளும்கட்சியினரின் தாக்குதல் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

chennai press club condemns the attack on erode journalists

by எஸ். எம். கணபதி, Jun 25, 2019, 11:26 AM IST

ஈரோட்டில் பத்திரிகையாளர்களை ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜூன்24ம் தேதி ஈரோடு அரசுப் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களில் ஒரு பிரிவினர், தங்களுக்கு அரசின் லேப்டாப் வழங்கப்படவில்லை என சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாணவர்களில் சிலருடன் வகுப்பறையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வுகளை செய்தி சேகரிக்க ஜூனியர் விகடன் நிருபர் நவீன், இந்து தமிழ் திசை நாளிதழ் நிருபர் கோவிந்தராஜ் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

பேச்சுவார்த்தையின் போது மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் வழங்கப்படாதது குறித்து பல கேள்விகளை எழுப்பினர். இதை பதிவு செய்து கொண்டிருந்த ஜூனியர் விகடன் நிருபர் நவீனை சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் மகனும், ஈரோடு மாவட்ட அதிமுக மாணவரணிச் செயலாளருமான ரத்தன் பிரித்திவ், ‘நீ யாரு, எதுக்கு வீடியோ எடுக்கிேற. ஒழுங்கா வெளிய போறியா, இல்லையா...' என ஏக வசனத்தில் மிரட்டியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த இந்து தமிழ் திசை செய்தியாளர் கோவிந்தராஜை கடுமையான வார்த்தைகளில் திட்டியபடி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளியுள்ளார்.

அ.தி.மு.கவைச் சேர்ந்த பலரும், ஜூனியர் விகடன் நிருபர் நவீனை சட்டையைப் பிடித்துத் தள்ளி, நெஞ்சில் ஓங்கி குத்தி போனை பிடுங்கி, கீழே தள்ளித் தாக்கியுள்ளனர், பத்திரிகையாளர்கள் மீதான இந்த மோசமான தாக்குதலை ஈரோடு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்னர் ஒரு கட்சித்தலைவர், ‘கேள்வி கேட்டால், கேள்வி கேட்பவரை வெட்டுவேன்’ என்கிறார். இன்றைக்கு ஈரோட்டிலோ, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அரசு நிகழ்ச்சிக்கு தொடர்பில்லாத ரத்தன் பிரித்திவ் என்ற நபர் காட்டுமிராண்டித்தனமாக செய்தியாளர்களை தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் மிகக்கடுமையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது, தாக்கப்படுவது, பொய்வழக்குகள் போடப்படுவது, கைது செய்யப்படுவது என கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. பத்திரிகையாளர்களை தாக்கிய ரத்தன் பிரதீவ் மற்றும் அவருடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை தாக்கிய ஆளுங்கட்சியினர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. தமிழக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டினால் மாநிலம் முழுவதும் பத்திரிகையாளர்களின் போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
ஊடக நிறுவனங்களின் நிர்வாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடரும் இந்த கொடூரத் தாக்குதல் சம்பவங்களை கவனத்தில் கொள்ளவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்வது, பத்திரிகையாளர்களை மிரட்டுவது, தாக்குதல்கள் நடத்துவது, பொய் வழக்குகள் போடுவது ஆகிய கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல்களை நிறுத்திவிட்டு, பத்திரிகை சுதந்திரத்தை பாதுக்காத்திட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அத்தனை அரசியல் கட்சிகளையும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களையும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு பாரதிதமிழன் கூறியுள்ளார்.

தேர்தல் தோல்வி எதிரொலி? ஊடகங்கள் மீது ராமதாஸ் எரிச்சல்

You'r reading ஆளும்கட்சியினரின் தாக்குதல் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை