நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, அ.தி.மு.க. சொன்னபடி ராஜ்யசபா சீட் தருமா என்ற சந்தேகம் போன்ற காரணங்களால், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஊடகங்கள் மீது கடும் எரிச்சலில் உள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் போட்டியிட்ட பா.ம.க. படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்கு சிறிது நாட்களுக்கு முன்பு, பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், ‘‘பா.ஜ.க. ஆட்சிக்கு மதிப்பெண் போடுவதற்கு பூஜ்ஜியத்திற்கு கீழே எதுவும் இல்லையே...’’ என்று பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தார். அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஒரு கூட்டத்தில் பேசுகையில், ‘‘எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு என்ன தெரியும்’’ என்று கேட்டதுடன், அவர்களை டயர் நக்கிகள் என்றும் கடுமையாக வசைபாடினார்.
இவ்வளவுக்குப் பிறகும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால், பா.ம.க.வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த சூழலில், தேர்தல் ஒப்பந்தப்படி அ.தி.மு.க. தங்கள் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருமா என்ற சந்தேகமும் பா.ம.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. காரணம், ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத கட்சிக்கு நாம் வாக்களித்து ராஜ்யசபா உறுப்பினர் பதவியை விட்டுத் தருவதா என்று அ.தி.மு.க.வில் பலரும் குரல் கொடுக்கிறார்கள்.
இது குறித்து ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், ஊடகங்கள் மீது ராமதாஸ் கடும் எரிச்சலடைந்துள்ளார். சென்னையில் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பு, ஜூன் 22ம் தேதி நடத்திய கருத்தரங்கில் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை அநாகரீகமான முறையில் விமர்சித்தார். மேலும், செய்தியாளர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.
இத்தனைக்கும் அந்த கருத்தரங்கின் தலைப்பு, ‘‘வளர்க்கப்படும் வெறுப்பு அரசியல்’’ என்பதுதான். வெறுப்பு அரசியலை ஒழிப்பதற்காக நடத்திய கருத்தரங்கில் உச்சகட்ட வெறுப்பை ஒரு மூத்த அரசியல் தலைவர் காட்டியிருப்பது பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ராமதாசின் பேச்சுக்கு மீடியா சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, தொலைக்காட்சி விவாதங்களில் நடுநிலை இல்லை என்று கூறி, அவற்றில் பா.ம.க. பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.