பாஜகவில் கறுப்பு ஆடுகள் சித்தராமையா பகீர் தகவல்

by எஸ். எம். கணபதி, Jul 12, 2019, 22:53 PM IST

பாஜகவில் கறுப்பு ஆடுகள் உள்ளன. அதனால், குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறும். எங்களுக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. காங்கிரசைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

இவற்றை இன்னும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. அப்படி ஏற்றுக் கொண்டால், ம.ஜ.த- காங்கிரஸ் கூட்டணியின் பலம் 118ல் இருந்து 100 ஆகி விடும். 105 எம்எல்ஏக்கள் வைத்துள்ள பாஜக, 2 சுயேச்சைகளுடன் சேர்ந்து 107 ஆகி விடும். அப்போது எளிதாக ஆட்சியமைத்து விடும்.

இந்த பரபரப்பான சூழலில், கர்நாடக சட்டப்பேரவையின் மழைக் காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி, ‘‘ சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க தயார். அதற்கான நாள், நேரம் குறியுங்கள்’’ என்று சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், முதல்வர் குமாரசாமியின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார். முதல்வர் குமாரசாமி திங்கட்கிழமை நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தால், மறு நாளே (செவ்வாய்கிழமை) ஓட்டெடுப்பு நடத்தத் தயார் என்று அறிவித்தார்.

இதனால் வரும் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, காங்கிரசும், பாஜகவும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சொகுசு ரிசார்ட்டுகளில் தனித்தனியே தங்க வைத்துள்ளன. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்காத நிலையில் உச்சநீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அவர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கும் நிலை ஏற்படலாம்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா கூறுகையில், ‘‘குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறும். எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடாமல் தடுக்க பாஜக நினைக்கிறது. காரணம், பாஜக பயப்படுகிறது. அந்த கட்சிக்குள் கறுப்பு ஆடுகள் இருப்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அந்த கறுப்பு ஆடுகளை நினைத்து எடியூரப்பா பயப்படுகிறார்’’ என்று கூறியுள்ளார்

You'r reading பாஜகவில் கறுப்பு ஆடுகள் சித்தராமையா பகீர் தகவல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை