ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக 20 வயதான ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் , டி-20, டெஸ்ட் என அனைத்துக்கும் ரஷீத்கான் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குல்பதீன் நபி தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்றது.லீக் சுற்றுப் போட்டிகளில் ஆடிய 9 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்த ஆப்கன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பெற்று சோகத்துடன் நாடு திரும்பியது. இந்தப் படுதோல்வியால் கேப்டன் குல்பதின் நபியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
நபிக்கு பதிலாக 20 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத்கானை கேப்டனாக அறிவித்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இவர் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்துக்குமே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக ஆஸ்கர் ஆப்கன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் ஆப்கன் அணியின் ஒரு போட்டிக்கான கேப்டனாக இருந்தார். இவர் கேப்டனாக விளையாடிய 56 ஒரு நாள் போட்டிகளில் 36 போட்டிகளில் வெற்றி தேடித் தந்த நிலையில், உலககோப்பை தொடருக்காக குல்ப தீன் நபி கேப்டனாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹ்மத் ஷா இருந்து வந்தார். அனைத்துவிதமான போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் என்ற நிலைப்பாடை எடுத்து தற்போது 20 வயதான இளம் வீரர் ரஷீத் கானிடம் பெறுப்பை ஒப்படைத்துள்ளது ஆப்கன் கிரிக்கெட் வாரியம். வரும் செப்டம்பரில் வங்கதேசத்துடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும், அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள், 3 டி-20 , ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளது ஆப்கானிஸ்தான் அணி .