கர்நாடக சட்டப்பேரவையில் வரும் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்களை பத்திரப்படுத்த, இரு கட்சிகள் அவர்களை ரிசார்ட்டுகளில் தங்க வைத்துள்ளனர்.
கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. காங்கிரசைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால், முதல்வர் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. பெரும்பான்மையை இழந்துவிட்ட குமாரசாமி, பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சியான பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.அத்துடன் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா திட்டமிட்டிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில், கர்நாடக சட்டப்பேரவையின் மழைக் காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி, தற்போதைய சூழலில் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொள்ள ஆசைப்படவில்லை. இந்த கூட்டத்தொடரிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க தயார். அதற்கான நாள், நேரம் குறியுங்கள் என்று சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், முதல்வர் குமாரசாமியின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார். எதையும் முறைப்படி செய்ய வேண்டும் என்பதால், முதல்வர் குமாரசாமி திங்கட்கிழமை நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தால், மறு நாளே (செவ்வாய்கிழமை) ஓட்டெடுப்பு நடத்தத் தயார் என்று அறிவித்தார். இதனால் வரும் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.
இந்த பரபரப்பான சூழலில், நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை .எனவே காங்கிரசும், பாஜகவும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சொகுசு ரிசார்ட்டுகளில் தனித்தனியே தங்க வைத்துள்ளன. இதற்கிடையே ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் நிலை தான் என்னவென்பது தெரியவில்லை. அவர்களின் ராஜினாமா க்களை சபாநாயகர் ஏற்காத நிலையில் உச்சநீதிமன்றம் சென்றனர்.
இந்த வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது எம்எல்ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் முடிவு எடுப்பதோ, தகுதி நீக்கம் செய்வதோ போன்ற எந்த முடிவும் எடுக்க தடை விதித்துள்ளது. இதனால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜினாமா கடிதம் கொடுத்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க முடியுமா? இல்லையா? என்ற குழப்பம் நீடிக்கிறது.