தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மீண்டும், மீண்டும் கால அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகிறது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக மாறி விட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, சென்னை மாநகராட்சி வார்டுகளில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை’ என்று கூறி, தேர்தல் அட்டவணையை ரத்து செய்தது. மேலும், புதிய அறிவிக்கை வெளியிட்டு அந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆணையம் மேல்முறையீடு செய்தது. அதன்பின், தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்காமலேயே காலம் கடத்தி வந்தது. இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை, புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், மக்களவைத் தேர்தல், புயல் என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, இது வரை தேர்தல் நடத்தப்படவில்லை. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு, நீதிபதிகளும் ‘‘எப்போதுதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவீர்கள்?’’என்று கேட்டு பார்த்து விட்டனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. அதன்பின்பும், ‘‘வார்டு மறுவரையறை பணிகள் ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவடையும். பின்னர் வார்டு மறுவரையறை அறிக்கை ஆகஸ்ட் 30ம் தேதி அரசிடம் அளிக்கப்படும். அதன்பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் சிலர் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள்(ஜூலை 17) விசாரணைக்கு வரவுள்ளது. அதற்கு முன்பாக இன்றே மாநில தேர்தல் ஆணையம் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘தேர்தல் நடத்துவதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும்’’ என்று கோரியுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது சந்தேகம்தான்.