தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கறாராக பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2016 நவம்பரில் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறாமல் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. முதலில் வழக்குகள் காரணமாக தேர்தல் தாமதமாகியது. அதன் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசும் தயக்கம் காட்டி வருகிறது.
தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றமும் பல முறை காலக்கெடு விதித்தும், கண்டிப்பு காட்டியும் பார்த்து விட்டது. ஆனால் ஏதேனும் ஒரு சாக்கு போக்கு கூறியே தேர்தலை நடத்த வேண்டிய மாநில தேர்தல் ஆணையம் தள்ளிப் போட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலமாக நடைபெற வேண்டிய மக்கள் நலப் பணிகள் முடங்கிப் போயுள்ளது. குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதற்குக் காரணம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதியும் நிறுத்தப்பட்டது தான். இதனால் ஏராளமான உள்ளாட்சி அமைப்புகள் நிதிப் பற்றாக்குறையாலும் தள்ளாடுகின்றன.
இந்த விவகாரம் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வியெழுப்பினார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் வெளிப்படைத்தன்மை என்று குற்றம் சாட்டிய ஆ.ராசா, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது . மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாத வரை, மத்திய அரசின் நிதியும் விடுவிக்கப்பட மாட்டாது என்று கறாராக பதிலளித்துள்ளார்.