நீட்தேர்வு குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டம் தயார் என முதல்வர் அறிவிப்பு

Ready to convene special assembly session to discuss NEET exam Edappadi

by எஸ். எம். கணபதி, Jul 17, 2019, 15:18 PM IST

நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசிடம் கேட்ட பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டமன்றத்தில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மக்களுக்கு தெரிவிக்காமல் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மறைத்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் குற்றம்சாட்டினார். அவர் பதவி விலக வேண்டுமென்று திமுக கோரிக்கை விடுத்தது. அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தாம் எதையும் மறைக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்றும் சட்டசபையில் பிரச்னை எழுப்பப்பட்டது. அப்போது ஸ்டாலின் பேச்சுக்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு எந்த தகவலையும் மறைக்கவில்லை. நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் இமெயில் கடிதத்திலும், அபிடவிட்டிலும் ரிஜெக்ட் என்ற வார்த்தையோ, ரிட்டர்ன் என்ற வார்த்தையோ இடம் பெறவில்லை. வித்ஹெல்டு என்றுதான் எழுதப்பட்டிருந்தது. எனவேதான், மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக நான் தெரிவித்தேன்.

நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம் தெரிந்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும்.

இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

அப்போது ஸ்டாலின், ‘‘அப்படி வித்ஹெல்டு என்று போட்டாலே அது நிராகரிப்பதற்்கு சமம். எனவே, சட்டமன்றத்தில் மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்புவீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘மசோதா நிராகரிக்கப்பட்டது ஏன் என்று விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை. மத்திய அரசின் விளக்கம் பெற்ற பின்புதான், அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, ‘‘நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளோம். நீட் தேர்வுக்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி விவாதிக்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது’’ என்றார்.

அஞ்சல் தேர்வில் தமிழ் நீக்கம்; சட்டசபையில் காரசார விவாதம்

You'r reading நீட்தேர்வு குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டம் தயார் என முதல்வர் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை