கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக நெருக்கடி முற்றியுள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. சபாநாயகருக்கே அதிகாரம் என்று தீர்ப்பு வாசிக்கப்பட, காங்கிரஸ், பாஜக, அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்போ, ஆளாளுக்கு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கருத்து கூறி வருகின்றனர்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த இரு கட்சிகளைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். இதனால் 224 பேர் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணிக்கான பலம் 119 லிருந்து 101 ஆக குறைந்துள்ளது. ஆனால் 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. சபாநாயகர் முடிவெடுக்கலாம் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. எனினும், இந்த ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இந்தச் சூழலில் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
இந்நிலையில், எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும், ராஜினாமாவை ஏற்க குறிப்பிட்ட கால அவகாசம் எதனையும் நிர்ணயிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பு சபாநாயகருக்கே அதிகாரங்கள் உள்ளது என்ற ரீதியில் சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
அதே வேளையில்,நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும், அவர்களை கலந்து கொள்ளுமாறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சாதகம் என்றே கூறலாம். இதனால் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கர்நாடக அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர் எடியூரப்பா கூறுகையில், இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கிடைத்த வெற்றி. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் தார்மீக ரீதியில் வெற்றி கிடைத்துள்ளது. இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இப்போது இழந்து விட்டது. உடனே அவர் பதவி விலக வேண்டும் என்று எடியூரப்பா
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதில் பாஜகவின் ஆபரேசன் தாமரை முயற்சிக்கு கிடைத்த தோல்வி என்று கூறி சத்யமேவ ஜெயதே என்று பதிவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் குமாரசாமியோ, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான நேரத்தில், சிருங்கேரி சங்கர மடத்தில் பயபக்தியுடன் தரிசனம் செய்தார். தீர்ப்பு குறித்து கேட்டதற்கு எந்த பதிலும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
இதற்கிடையே கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமாரோ, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. உச்ச நீதிமன்றம் என் மீது வைத்துள்ள கூடுதல் நம்பிக்கையை காப்பாற்றுவேன். இதனால் எனது எந்த முடிவும் சட்டப்படி இருக்கும். யாருக்கு சாதகம்? பாதகம்? என்றெல்லாம் பார்க்க மாட்டேன் . நாளை திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறிய சபாநாயகர் ரமேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்பீர்களா? தகுதி நீக்கம் செய்யப்படுவார் களா? என்று கேட்டதற்கு கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.