வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோரின் வேட்புமனுக்கள், எதிர்ப்பு காரணமாக நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தத் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கலும் நேற்றுடன் நிறைவடைந்தது.
ஏற்கனவே தேர்தல் ரத்தான போது, போட்டியில் இருந்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்பட 50 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அப்போது ஏ.சி.சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோர் மனுக்களை ஏற்கக் கூடாது என மற்ற வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் இந்த இருவரின் வேட்புமனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு மற்ற வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் ஆகியோரின் மனுக்கள் நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பு மனு பரிசீலனை முடிவில் சுயேட்சைகள் 19 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட 31 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு வாபஸ் பெற வரும் திங்கட்கிழமை கடைசி நாளாகும். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகும்.